தேர்தல் முகங்களும் மக்களின் முகச்சுழிப்புகளும்!

534 0

தமிழ் மண்ணில் பருவ காலங்கள் ஆறு. கார் காலம், கூதிர் காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனிற் காலம், மற்றும் முதுவேனிற் காலம் என இயற்கை தன் செயற்பாட்டுக் காலங்களை ஒழுங்கமைத்துக்கொண்டது.  இதற்கு அமைவாக மனிதனின் நடை, உடை ,பாவனைகள் அமைந்தன.

இக்காலங்கள் உலக வெப்பமயமாதலில் மாறி இயற்கையை சீற்றங்கொள்ள வைத்துள்ளன. இப் பருவ காலங்கள் போல ஈழ மண்ணில் தேர்தல் களம் எனவும் ஒரு காலம் உள்ளது. இந்த தேர்தல் காலத்தில் மக்களின் வாழ்கை முறையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதால் வாக்களித்த மக்கள் சீற்றம் கொள்கின்றனர்.

எனவே, காலம் காலமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்படும் வேலைத்திட்டங்களை நிறைவேற்ற எந்தக் கட்சியும் முன் வருவதில்லை.

தேர்தலில் வென்ற கட்சி தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கு “ பணித்திட்டம்” ஒன்றை எழுதி அதற்குரிய பணத்தை உரிய இடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும். பெற்றுக் கொண்ட பணத்திற்கு கண்துடைப்பாக குறித்த வேலையை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

உரிய வகையில் கணக்கினை காட்டி தம் கஜானாக்களை நிரப்பிக் கொள்வார்கள். தற்போது வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி தேர்தலுக்கான பிராச்சார பணிகளை கட்சிகள் முடக்கி விட்டுள்ளன. மாவீரர்கள், தேசியத்தலைவர் என வேட்பாளர்கள் வாய் நிறைய அள்ளி வீசுவாரர்கள் . இவை தான் மக்களை வாக்கிற்காக பிடிக்கும் தூண்டில்கள்.

தேர்தல் வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன, தேர்தல் விதிமீறும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

வேட்பாளர்கள் வேடங்கள் தரித்து தேர்தல் முகத்தை காட்டி நிற்கிறார்கள். அது என்ன தேர்தல் முகம் என யோசிக்கின்றீர்களா?

வேட்பாளர்கள் , யாரைக் கண்டாலும் பணிவாக புன்னகைப்பார்கள், அது தான் தேர்தல் முகம் .

இவர்களின் தேர்தல் முகங்களை மக்கள் அடையாளம் கண்டு விட்டார்கள் . இவர்களை கண்டதும் மக்கள் முகம் சுழிக்கின்றார்கள்.

Leave a comment