ஐ.நா. சபையில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் பாகிஸ்தான் பங்கேற்பு

5398 0

ஐ.நா. சபையில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி கலந்து கொண்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். 

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமைந்து உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்தில் இந்திய குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளில் அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகள் பங்கேற்றன. அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி, ஊரில் இல்லை என்பதால் கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி கலந்து கொண்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்துவதாக அமைந்தது.

நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த விழாவில் ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா, கலந்து கொண்டார். அங்கு அமைந்து உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா நகரங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.

Leave a comment