எடப்பாடி அரசு விரைவில் வீட்டுக்கு போகும்: புகழேந்தி

232 0

பஸ் கட்டண உயர்வால் விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்ல போகிறது என திருத்துறைப்பூண்டியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தினகரன் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் தெரிந்தே நிற்கவில்லை என்றால் அது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கும், ஆண்டாள் பற்றிய விமர்சனத்துக்கும் டி.டி.வி.தினகரன் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளார். பஸ் கட்டண உயர்வின் மூலம் ஆளும் கட்சியினர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளனர். பஸ் கட்டணம் என்பது மக்களின் பணத்தை சுரண்டுவதற்காக உயர்த்தி உள்ளனர்.

விரைவில் முதல் அமைச்சர் எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்ல போகிறது. இதற்கு இந்த பஸ் கட்டண உயர்வு தான் காரணமாக இருக்கும். எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை தினகரன் வேண்டாம் என்று கூறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மன்னார்குடியில் புகழேந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தான் எங்களது கட்சி. தற்போது கட்சியை வழிநடத்துபவர் சசிகலா தான்.இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் சட்டசபைக்கு வருவார்கள்.எனது ஆசையெல்லாம் ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் அனைவரின் ஆதரவுடன் விரைவில் தினகரன், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது தான்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment