புதுக்கோட்டையில் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம்

245 0

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் -புதுக்கோட்டையில் இன்று பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7.30 மணியளவில் செட்டிக்குளம் கடைவீதியில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆண், பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் அரசு -தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு பாடாலூர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்லக்கூடியவர்கள், வெளியூர் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும் போது, செட்டிக்குளம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். பெரும்பாலானோர் கூலி வேலை செய்தே பிழைப்பு நடத்தி வருகிறோம். வேலைக்கு செல்ல பஸ்களையே பயன்படுத்தி வருகிறோம். தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் நாங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி ரூபாயை பஸ் கட்டணத்திற்கே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி.

இதேபோல் பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை அப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள் எம்.எல்.ஏ. வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், அப்போது தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நடத்தினர். கல்லூரி முன்பு திரண்ட மாணவர்கள், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் போராட்டம் பெரியஅளவில் மாற வாய்ப்பிருந்ததால் இன்று கல்லூரிக்கு விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் மனோகரன் உத்தரவிட்டார்.

இதேபோல் அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) சிற்றரசு உத்தரவிட்டார். இதே போல் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment