ஜப்பானில் எரிமலை வெடித்து சிதறியது: ராணுவ வீரர் பலி

358 0

ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் குசட்சு ஷிரேன் என்ற எரிமலை வெடித்து சிதறியதில் ராணுவ வீரர்கள் 6 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் குசட்சு ஷிரேன் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலையில் நேற்று கடுமையான சீற்றம் ஏற்பட்டு வெடித்து சிதறத்தொடங்கியது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் 6 ராணுவ வீரர்கள் குளிர்கால போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

எரிமலை வெடிப்பின் காரணமாக, அதில் இருந்து ஒரு கி.மீ. பரப்பளவில் பாறைகள் வந்து விழுந்தன. அவற்றில், போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்புப்படையினர் அங்கு விரைந்தனர். சிக்கிய ராணுவ வீரர்கள் 6 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதை ராணுவ அமைச்சகம் உறுதி செய்து உள்ளது.

அங்கு மலைப்பகுதியின் உச்சியில் அமைந்துள்ள ஓய்வு இல்லத்தில் இருந்த 78 பேர், எரிமலை சீற்றத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவில் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எரிமலை உச்சக்கட்டமாக வெடித்து சிதறுகிறபோது, 2 கி.மீ. பரப்பளவுக்கு பாறைகள் வந்து விழக்கூடும் என்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஜப்பானில் ஆன்டேக் என்ற எரிமலை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென வெடித்து சிதறியபோது அதில் சிக்கி 63 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

Leave a comment