தமிழக ராணுவ வீரர் வீர மரணம்

281 0

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம் அடைந்தார்.

காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயுதப் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுரவச் செய்ய வைப்பதற்காக இத்தகைய எல்லை அத்துமீறலில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடுகிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய முயன்ற போது, இந்தியா கடும் பதிலடி கொடுத்தது. அதில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா செக்டாரில் நேற்றிரவு 9 மணிக்கு திடீரென பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே விடிய, விடிய கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், சிறிய ரக பீரங்கிகளாலும் தாக்குதல் நடத்தினார்கள். பீரங்கிக் குண்டுகள் ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள அர்னியா என்ற பகுதியில் விழுந்தன. இதில் சில கிராம மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

உடனே அந்த பகுதிக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் 78-வது பட்டாலியன் விரைந்தது. அந்த பட்டாலியின் வீரர்கள் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இன்று அதிகாலை வரை பதிலடி கொடுத்தனர்.

அப்போது பாகிஸ்தான் தாக்குதலில் சில வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு ராணுவ வீரர் சுரேஷ் குண்டுகள் பாய்ந்து வீர மரணம் அடைந்தார்.

ராணுவ வீரர் சுரேஷ் 1976-ம் ஆண்டு பிறந்தவர். 1995-ம் ஆண்டு அவர் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். 42 வயதான அவர் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார்.

Leave a comment