சர்வதேச சட்டமாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தலாம் – சிங்கப்பூர் பேராசிரியர்

10197 0

சர்வதேச சட்டங்களின் மாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்க வேண்டும்.ஆனால் இது உடனடியாக சாத்தியப்படும் விடயமல்ல.இதனை செய்ய நீண்டகாலம் எடுக்கும்.ஆனாலும் நாம் அதனை செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக சட்டத்துறை பேராசிரியர் மு.சொர்ணராஜா தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு “வடக்கு கிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்” எனும் தொனிப்பொருளில் கருத்துக்களை பகிரும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது,

இலங்கையில் உள்ள சட்டங்களில் அதிகமானவை தமிழர்களை வெகுவாக பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.அவை தமிழர்களுக்கு கொடுமை இளைக்கும் வகையில் உள்ளது.அவ்வாறான் கொடுமையான சட்டங்கள் தமிழ் மக்கள் மீது வேண்டுமென்றே ஏவி விடப்பட்டுள்ளது.ஆரம்பகாலம் முதல் இந்நிலையில் மற்றம் எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

தற்போது கூட்டாட்சி அரசு இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி வருகின்றது.அவ்வாறு அதிகாரப்பகிர்வுக்கு முயற்சிக்கும் போது அனைத்து தரப்பும் முழுமனதுடன் செயற்பட வேண்டும்.அப்போதே அது சாத்தியமாகும்.முன்பும் அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டது.எனினும் அப்போது சிங்கள,பௌத்த மேலத்திக்கம் காணப்பட்டமையினால் அது கை கூடாது சென்றது.

இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்கள் கலைத்தனர்.இதனால் உலகம் எங்கும் இப்போது தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.அதிலும் மேற்கத்தேய நாடுகில் அதிகளவான இலங்கை தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.மேற்கத்தேய நாடுகளில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

சர்வதேச சட்டங்கள் ஆரம்பத்தில் இருந்ததிலும் பார்க்க இப்போது விரிவடைந்து செல்கின்றது.மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் அதிலும் தனிமனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் விரிவடைந்து செல்கின்றன.எனவே நாம் சர்வதேச சட்டத்தின் ஊடாக எமது உரிமைகளை பெற்றெடுக்க வேண்டும்.

இலங்கையில் 2009n ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் மட்டும் போர்க்குற்றம் நடக்கவில்லை.ஆரம்பகாலமான 1958 ஆம் ஆண்டு கால கறுப்பு ஜூலை கலவரத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் போர் வரை போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளது.ஆகவே ஆரம்பத்திலிருந்து முழுமையாக விசாரணைகள் இடம்பெறவேண்டும்.இந்த கருத்தை முன்வைத்தே நாம் மனித உரிமை பேரவையிடம் வலியுறுத்த வேண்டும்.குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும்.

ஏனைய நாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட உதாரணங்கள் உள்ளன.அவற்றை அடிப்படையாக வைத்து நாமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.ஆனால் இது ஒரு நாளிலோ,ஒரு மாதத்திலோ,வருடத்திலோ நடக்காது.இது சாத்தியமாக நீண்ட காலம் எடுக்கலாம்.ஆனால் நாம் அதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

Leave a comment