தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்: இளங்கோவன்

197 0

தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார் என்று முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியின் பிறந்த நாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா அண்ணா தொகுதி செனாய் நகரில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் தலைமை தாங்கினார்.

விழாவில் 500 பெண்களுக்கு சேலை, பச்சரிசி, வெல்லம், கரும்பு ஆகிய இலவச பொங்கல் பொருட்களை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது மகிழ்ச்சி திருநாள். மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் ஆட்சிகள் அகற்றப்படும் நாள்தான் மக்கள் உண்மையான மகிழ்ச்சி அடைவார்கள்.

தமிழகத்திலும் பொங்கலுக்கு பிறகு நல்ல தகவல் வரும். தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். மாற்றம் முடிவாகி விட்டது.

ஆகவே சில நாட்களாவது சந்தோ‌ஷமாக பேசி விட்டு போகட்டும். காங்கிரஸ் தோழர்களுக்கு நான் தருகின்ற செய்தி. தைரியமாக இருங்கள். உழைப்புக்கு மரியாதை இருக்கும். புல்லுருவிகளும், எங்களுடைய கட்சிக்குள் புகுந்து விட்டவர்களும் வெளியே தூக்கி எறியப்படும் காலம் வந்து விட்டது. இருக்கும் கிரீடத்தை எடுப்பது உறுதியாகி விட்டது. யாருக்கு சூட்டுவது என்பதை தலைவர் ராகுல் முடிவு செய்வார்.

அகில இந்திய தலைவர் தேர்தல் முடிந்ததும் புதிய மாநில தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மாற்றப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று அவ்வளவுதான்.

தலைவர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்கிறீர்கள்? அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னை பொறுத்த வரை கட்சி வேலைகள் சரியாக நடைபெறாத நிலையில் புதிய தலைமை என்பது நல்லது தான் என்று கருதுகிறேன்.இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பீட்டர் அல்போன்ஸ் கூறும்போது, தை பிறந்தால் வழி பிறக்கும். நிச்சயமாக தமிழக காங்கிரசுக்கும் நல்வழி பிறக்கும் என்றார்.தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முருகானந்தம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ஏ.ஜி. சிதம்பரம், வி.ஆர். சிவராமன், வசந்தராஜ், பாலமுருகன், வில்லிவாக்கம் சுரேஷ், ராகுல், எம்.ஆர்.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment