இனவழிப்புப் போரின் பாதிப்பிற்குள்ளிருந்து எமது மக்களை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு எமக்கும் உண்டு! -அனந்தி சசிதரன்

480 0

இனவழிப்புப் போரின் பாதிப்பிற்குள்ளிருந்து எமது மக்களை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு எமக்கும் உண்டு. அதனை நிறைவேற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம் என, சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில் வட மாகாண மகளிர் விவகார, சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரான குறுகிய காலத்தில் அமைச்சின் கீழான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்திருந்ததுடன் 2018 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறமையுடன் முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு, வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தைச் சேர்ந்த சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுடன் மேற்கொண்ட அவசர கலந்துரையாடலில் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்..

வட மாகாணத்திற்குட்பட்ட மக்கள் எல்லோரையும் நான் நேரில் சந்தித்து அவர்களது நிலை குறித்து அறிந்து கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே சமூக சேவைகள் உத்தியோகத்தர்களாக பணியாற்றிவரும் உங்கள் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

மக்கள் உங்களை அணுகி தமது தேவைகள் மற்றும் குறைகளை தெரியப்படுத்தும் வகையில் உங்கள் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதன் மூலமே, அவர்கள் என்னை தேடிவந்துதான் தமது குறைகளையும் தேவைகளையும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையை தவிர்க்க முடியும்.

இனவழிப்பு யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போயிருக்கும் எமது மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இவ் வேளையில் தமது குறைகளையும் தேவைகளையும் தெரியப்படுத்தி உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அலைந்து திரிவதை தவிர்க்கும் வகையில் உங்கள் செயற்பாடுகளை அரப்பணிப்புடன் மேற்கொள்ள முன்வரவேண்டும் என அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த வாழ்வாதார உதவித்திட்டங்களில் பெரும்பாலானவை நிலுவையில் உள்ளது குறித்து அமைச்சர் வினவிய போது, வாழ்வாதார உதவித்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகை போதாமையால் அதனை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தயக்கம் காட்டிவருவதாக சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் பதிலளித்திருந்தனர்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைச்சு, தேசிய மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சின் கீழ் மத்திய அரசு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியில் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் உதவிகூட வெகு சிலருக்கே கிடைத்துள்ளது.

ஆனால் தங்கள் அமைச்சின் கீழ் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதிக்கு உட்பட்டே வாழ்வாதார உதவித்திட்டங்களை செய்ய முடிகின்றது. இவ் ஐம்பதாயிரம் ரூபாவுக்கான உதவியைப் பெற்றால் இதைவிட கூடிய தொகைக்கான உதவியை பெறும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காது போய்விடுமோ என பயனாளிகள் அஞ்சுகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை நடைமுறைபடுத்த இத்தொகை போதாதென்பதால் அதனை பெற்றுக் கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். வட மாகாண சபையை புறக்கணித்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் இவ்வாறான தலையீடுகள் காரணமாக நிர்வாக செயற்பாடுகளில் சமச்சீரற்ற நிலை காணப்படுகின்றது.

இதனை போக்கி மத்திய அரசு வழங்கும் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்டங்களை வட மாகாண சபையின் கீழ் மேற்கொள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கையினை கலந்து கொண்டிருந்த சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் அமைச்சரிடம் முன்வைத்திருந்தார்கள்.

அவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து மேற்கொள்வதாக கூறியிருந்தார்.

வட மாகாணத்திற்குட்பட்ட ஐந்து மாவட்டங்களில் பணியாற்றிவரும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இவ் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் 04.01.2018 அன்று நடைபெற்றுள்ளது. இவ் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் அவர்களும் வட மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி வனஜா அவர்களும் சமூக சேவைகள் மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment