முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை அடகுவைத்துவிட்டார்கள்- அஸ்மின்

201 0

யாழ் முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையிடும் அவசரத்தில் யாழ் முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையும் அடையாளத்தையும் முஸ்லிம் தலைவர்கள் அடகுவைத்துவிட்டார்கள்  என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார் நேற்றையதினம் (03-01-2017) முஸ்லிம் வட்டாரத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

1978ம் ஆண்டுக்கு முன்னர் வட்டாரமுறைமைத் தேர்தல் இருந்தது, அப்போது முஸ்லிம் பிரதேசங்கள் வடக்குச் சோனகர்தெரு, தெற்குச் சேனகர்தெரு என இரண்டு வட்டாரங்களாகக் காணப்பட்டன, அதன் பின்னர் வட்டார முறைமை இல்லாமல்போனது இப்போது மீண்டும் வட்டார முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது; 2015 வரைபிலே கிராம சேவையாளர் பிரிவு ஜே86 ஒரு வட்டாரமாகவும், ஜே87 பிரிவு இன்னுமொரு வட்டாரமாகவும் பிரிவுகள் ஜே85, ஜே88 ஆகியன இணைக்கப்பட்டு இரு அங்கத்தவர் வட்டாரமாக இருந்தது இதன்மூலம் 03 முஸ்லிம் உறுப்பினர்கள் வட்டாரரீதியாகப் போட்டியிடும் வாய்ப்புக் காணப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் விளைவாக ஜே 86, ஜே87 ஆகியன இணைக்கப்பட்டு பழையசோனகர்தெரு வட்டாரமாகவும் ஜே88 புதிய சோனகர்தெரு வட்டாரமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது, இதன்மூலம் இரண்டு வட்டாரங்களில் போட்டியிடும் சந்தர்ப்பம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று ஏனைய பிரதேசங்களில் வசிக்கின்ற சிறு அளவிலான முஸ்லிம் மக்களை மையப்படுத்தி விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்களையும் களமிறக்க முடியும். இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கின்றோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்திருப்பதே முஸ்லிம்களுக்குப் பலமானது என்று குரல்கொடுப்போர் இந்த விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையிடும் அவசரத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையும் அடையாளத்தையும் அடகுவைத்துவிட்டார்கள்.

அவர்கள் எவருமே பழைய சோனகர் தெரு வட்டாரத்தைப்போல புதிய சோனகர்தெரு வட்டாரத்திற்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. உட்கட்சிப் பூசல்களும், பணத்திற்காக வேட்பாளர்களை விலைபேசுவதற்கும் அஞ்சியே அவர்கள் இவ்வாறு எமது மக்களின் அடிப்படைகளை இல்லாமல் செய்திருக்கின்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்பன இந்தத்தவறை செய்திருக்கின்றார்கள். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மதித்து பழையசோனகர்தெரு வட்டாரத்திற்கும், புதிய சோனகர்தெரு வட்டாரத்திற்கும் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது மாத்திரமன்றி ஜே.86 மற்றும் ஜே 87 பிரிவுகளை மையப்படுத்தி விகிதாசாரப்பட்டியல் வேட்பாளர்களையும் களமிறக்கி அவர்களுடைய அங்கத்துவத்தை உறுதியும் செய்திருக்கின்றது. எனவே 2018 யாழ் மாநகரசபைத் தேர்தலில் 04 முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன்மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய கௌரவமாகவும், அங்கீகாரமாகவும் அமையப்பெற்றிருக்கின்றது.

இன நல்லுறவைப் பற்றிப் பேசுகின்ற அமைச்சர் றிசாத் பதியுத்தீன் போன்றவர்கள்; இனமுரண்பாட்டினாலேயே தம்முடைய அரசியலைத் தக்கவைத்திருக்கின்றார்கள் என்ற உண்மையை மறைக்க முயல்கின்றார்கள், இனமுரண்பாடு இல்லாவிட்டால் அவர்களால் அரசியல் செய்யவே முடியாது. இப்போது இனங்கள் என்ற நிலைமையையும் தாண்டி ஒரே சமூகத்தினுள் பிளவுகளையேற்படுத்தும் ஆபத்தான செயலையும் அவரே முன்னின்று மேற்கொள்கின்றார் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன இதற்கான நல்ல உதாரணமே கல்முனை- சாய்ந்தமருது விவகாரமாகும். எனவே யாழ்ப்பாண முஸ்லிம்களை தொடர்ந்தும் ஏமாற்றும் நடவடிக்கைகளுக்கு இம்முறை யாழ்ப்பாண முஸ்லிம்கள் இடம்தரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment