ஜெயலலிதா மரணம் விசாரணை: பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி- உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன்

223 0

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி, உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டு உள்ளது.

இவர்களை நேரில் வரவழைத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார்.

விசாரணை ஆணையத்தில் இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அண்ணன் தீபக், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு ‘எம்பாமிங்’ செய்த சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை தலைவர் சுதா சே‌ஷய்யன், ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றழித்த டாக்டர் பாலாஜி, தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அடங்கிய ‘பென் டிரைவ்’வையும் டி.டி.வி. தினகரன் தனது வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்பித்துள்ளார்.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் சத்யபாமா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் யார்-யார்? அவர்கள் என்னென்ன சிகிச்சை அளித்தனர்? சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிட்ட விவரங்கள் அனைத்தும் இவருக்கு தெரியும் என்பதால் அது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விவரங்கள் கேட்டார்.

இதற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்ய பாமா கூறிய பதில்களை பதிவு செய்து கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.

வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) அவர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் 9-ந்தேதி ஆஜராகவும் குடும்ப டாக்டர் சிவக்குமார் 8-ந்தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

Leave a comment