18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு – ஐகோர்ட்டில் 9-ந்தேதி இறுதி விசாரணை

8119 0

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட 18 பேர் கவர்னரிடம் கடந்த செப்டம்பர் மாதம் மனு கொடுத்தனர்.

முதல்-அமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்துக்காக இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 எம். எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இதில் தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் ரோத்தஹி வாதிட்டார். கவர்னர் சார்பில் அட்வகேட் விஜய் நாராயண் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணையில் 18 எம்.எல்.ஏ.க் களின் தரப்பிலும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

வழக்கின் இறுதி விசாரணை வருகிற 9-ந்தேதி ஐகோர்ட்டில் நடைபெறுகிறது. அன்றைய தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலும், சபாநாயகர் தரப்பிலும் இறுதி வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் வழக்கை விசாரித்து முடிக்க உள்ளனர். இதன் பிறகு தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment