ஜெயலலிதா உடலை எம்பால்மிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

3818 0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர்கள் 10 நாளில் விளக்கம் அளிக்கவும் சசிகலா 15 நாளில் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த சென்னை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதா சேஷய்யன் ஜனவரி 3-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, டாக்டரி சுதா சேஷய்யன், எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் இன்று காலை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்பல்லோ டாக்டர் சத்யபாமா நாளை (ஜனவரி 4-ந் தேதி) ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரது கன்னத்தில் சிறிய அளவில் நான்கு துவாரங்கள் காணப்பட்டன. இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல நாட்களுக்கு முன்னதாகவே ஜெயலலிதா இறந்துவிட்டதால் உடல் எம்பால்மிங் முறையில் பதப்படுத்தியிருப்பதாக பேசப்பட்டது.
இதுபற்றி விளக்கம் அளித்த டாக்டர் சுதா  சேஷய்யன், தட்பவெட்ப சூழல் காரணமாக உடல் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஜெயலலிதா இறந்தபின்னர் அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment