சென்னையில் 4-ந்தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

553 0

லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்றகோரி சென்னையில் வரும் 4-ந்தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

21 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலங்களில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் தழைத்தோங்கியுள்ளது.

அதேபோல், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்ப்பதற்கான பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2010-ம் ஆண்டு முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தையும் தமிழகத்தில் கொண்டு வர திராவிடக் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச்சட்டமும் தமிழகத்தில் பயனின்றி போய் விட்டது.

இச்சட்டப்படி அமைக்கப்பட்ட தகவல் உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அப்பழுக்கற்ற சமூக ஆர்வலர்களை நியமிப்பதற்கு பதிலாக அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து வாக்கு வாங்கிய அதிமுக, பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதில் திராவிடக் கட்சிகளுக்கு உள்ள அக்கறை என்பது இவ்வளவு தான்.

தமிழ்நாட்டில் வரும் 8-ந் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வரைவையும், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல் தகவல் உரிமை ஆணையத்தை 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக விரிவு படுத்துவதுடன், அதில் அப்பழுக்கற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4-ந் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment