சுனாமி நினைவு தினம்: கடலூர் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

317 0

சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினத்தில் இன்று நடந்தது. பின்னர் சுனாமியில் பலியான உறவினர்களுக்கு கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.

இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழகத்திலும் சுனாமியின் கோரப்பசிக்கு பலர் இறந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி புரட்டி போட்டது.

மீனவர்களின் 7 ஆயிரம் கட்டுமரங்கள், பைபர் மற்றும் விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன் பிடிபடகுகள், 650 ஹெக்டேர் விவசாய நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்து சென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் பலியாகினர்.

எங்கும் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி பேரலை தாக்கி 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழக கடலோரங்களில் அதன் சோக நினைவுகள் இன்றும் அகலவில்லை.

சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினத்தில் இன்று நடந்தது. தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கடற்கரைக்கு மவுன ஊர்வலம் சென்றனர்.

பூக்கூடைகளையும், பால்குடங்களையும் ஏந்தியபடி சென்றனர். நெஞ்சத்தில் சோகத்தையும், கண்களில் கண்ணீரையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சுனாமியில் பலியான தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பாலை ஊற்றினர். கூடைகளில் கொண்டு வந்த பூக்களை கடலில் தூவினர்.

கடற்கரையில் 5 நிமிடம் மவுனமாக அமர்ந்து இருந்தனர். சுனாமியில் பலியான தங்களது குடும்பத்தினரை நினைத்து கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.

இதையடுத்து சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுத் தூண் உள்ள பகுதிக்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் சிந்தினர்.

மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் உள்பட ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களை நினைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து கதறித்துடித்தனர் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் எங்கும் அழுகை குரல் கேட்ட வண்ணம் இருந்தது.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் கடலூரில் உள்ள மீன் மார்க்கெட்டுகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளது.

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பலர் தங்களது வீடுகளில் பலியானவர்களின் படத்தை வைத்து விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சுனாமியின்போது காரைக்கால் கடற்கரையோரம் வசித்தவர்களும் ராட்சத அலையில் சிக்கி சுமார் 500 பேர் பலியாகினர் . அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

புதுவை நிர்வாகம் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அஞ்சலி செலுத்தினர் .

அதைத்தொடர்ந்து சுனாமியின் போது இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நண்டலாறு, பட்டினச்சேரி பகுதியில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Leave a comment