ஆஸி.யில் இந்தியப் பெண்ணை சித்திரவதை செய்த இலங்கைத் தம்பதிகள்

276 0

அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளார். 

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இலங்கையைச் சேர்ந்த கந்தசாமி கண்ணன், குமுதினி ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்களின் மூன்று குழந்தைகளைப் பராமரிக்க இந்தியாவில் இருந்து பணிப்பெண்ணை வேலைக்கு நியமித்தனர்.

சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட இந்திய பெண்ணை அதிகாலை 5.30 முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி பணியாற்ற இலங்கை தம்பதியர் வற்புறுத்தியுள்ளனர் என இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் கந்தசாமி குடும்பத்தினர் ஒருமாதம் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இந்திய பணிப்பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து சென்றுள்ளனர்.

அவரது உணவுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார்.

மிகவும் பலவீனமடைந்ததால் போலி பெயரில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.  இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கந்தசாமி குடும்பத்தினர் இந்திய பணிப் பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக நடத்தியது தெரியவந்தது.

பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட கந்தசாமி, குமுதினி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணின் பெயர், விவரத்தை அவுஸ்திரேலிய பொலிஸார் வெளியிடவில்லை.

Leave a comment