ஈரான் – ஈராக் எல்லையில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.0 ஆக பதிவு

325 0

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் நேற்றிரவு 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 25.3 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று அதற்கு முன்னதாக அதே பகுதியில் 4.7 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்படலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 530க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்தனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment