ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 5 படகுகளுடன் 27 பேர் சிறைபிடிப்பு

986 0

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 5 படகுகளுடன் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போதும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் காயம் அடைந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

இந்த சூழலில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் ஒக்கி புயல் உருவானது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 13 நாட்களுக்கு பின்பு நேற்று கடலுக்கு செல்ல அவர்களுக்கு மீன்வளத்துறை மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.

இதையடுத்து ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரம் மீனவர்கள் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடிக்க சென்றபோது 7 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை என மீனவர்களிடம் தெரிவித்து மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர். மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

தொடர்ந்து மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடும் நடத்தியதாக தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இதற்கிடையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் இன்று காலை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவங்கள் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், 13 நாட்களுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மீன் பிடிக்க சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் எங்களை தடுத்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் பயனில்லை.

அதிகாலை நேரத்தில் புறப்பட்டு செல்லலாம் என்று நினைத்து நாங்கள் புறப்பட்டபோது திடீரென்று எங்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்தன.

ஏற்கனவே 2 வாரங்களாகவே வேலை இல்லாத நிலையில் இன்று மீன் பிடித்து வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து இது போன்று நடந்தால் மீன் பிடி தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Leave a comment