தீர்வுகள்தராத தினமேன்?

488 0

தீர்வுகள்தராத தினமேன்?
—————————————
தினமொரு தினம் வைத்துத்
தீர்வுகள் ஏதுமின்றிக்
கண்ணாடி மாளிகையில்
காகிதத் தீர்வுக்காய்க்
கூடிக் கலைகின்ற ஐநாவே
உனக்குத் தெரியாது
உயிரடங்கும் வேதனைகள்!
வேதனைகள் சுமந்தபடி
உலகின் மூலை முடுக்கெல்லாம்
அலைகின்ற மாந்தரினம்
அடிப்படை உரிமைக்காய்
அன்றாடம் பிணமாகி
அலைக்கழிந்து வீழ்கின்ற
அவலநிலை தொடர்கையிலே
நீயேன் இருக்கின்றாய் ஐநாவே!
உனக்கு எதற்காகத் தினங்களென
உரிமையற்ற மாந்தர்கள்
உரத்துக் கேட்பது
உனக்குப் புரியாது
காற்றுக்கூடப் புகாத
கண்ணாடி மாளிகையில்
கழுத்துப்பட்டியுடன் அமர்ந்து
குளிரூட்டிக் காற்றுவர
குளிர்பாணம் குடித்தபடி
எத்தனையாம் என்றுகேட்டு
உயிர்களை எண்ணிக்கையால்
தீர்ப்பாக்கும் சபையான
உயிரின் வலிபுரியா ஐநாவே
கணக்கெடுக்கும் வேலைக்கு நீ எதற்கு!
அனைத்துலக மனித உரிமைக்கு
தினங்கள் தேவையில்லைத்
தீர்வுகளே தேவையிந்த உலகுக்கு
என்பதனைப் புரியாத உலகா இது
நிலமிழந்து நலிவடைந்து
நாள்தோறும் சாவு சூழ
நானிலத்து மாந்தர்களோ
நரகத்துள் வாழ்கின்றார்
மனித உரிமையிங்கு
எழுத்தினிலே இருந்தென்ன
மாந்தரது வாழ்வினிலே
மனித உரிமை மலருகின்ற
வேளையொன்று மலர்ந்தாலே
மனித உரிமைத் தினமதிலே
மாண்பொன்று இருக்குதென்று
இவ்வுலகு சிந்தைகொள்ளும்!

மா.பாஸ்கரன்
யேர்மனி

Leave a comment