பொள்ளாச்சி அருகே சுற்றுலா சென்ற கார் வாய்க்காலில் பாய்ந்தது: 4 பேர் கதி என்ன?

453 0

பொள்ளாச்சி அருகே வாய்க்காலுக்குள் கார் பாய்ந்தது. இதில் ஒரு வாலிபர் உயிர் தப்பினார். 4 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமானியை சேர்ந்தவர் ஆல்பா (19). பட்டதாரி. இவரது நண்பர்கள் ஜூதின் ஜோய் (24), ஜாக்சன்(21),அமல் (20), லிஜோ (27).

இவர்களில் ஜூதின் ஜோய் துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். இவர்கள் 5 பேரும் கடந்த 7-ந் தேதி மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்தனர்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். காலை 7.15 மணியளவில் அவர்களது கார் பொள்ளாச்சி அருகே உள்ள கெடி மேடு பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு கார் வாய்க்காலில் பாய்ந்தது. வாய்க்காலில் சுமார் 11 அடி தண்ணீர் உள்ளது. அதில் கார் மூழ்கியது.

கார் வாய்க்காலில் பாய்ந்த போது அதன் பின்பக்க கதவு திறந்தது. அதில் இருந்து வெளியே வந்த ஆல்பா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் பால்வேன் டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த கார்த்திகேயன் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தார். அவர் தண்ணீரில் தத்தளித்த ஆல்பாவை மீட்டார்.மற்ற 4 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.காரை மீட்கும் பணியில் பொள்ளாச்சி, கோமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment