கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்பூரில் 4 இன்ச் உயரத்திலான தங்க கிறிஸ்துமஸ் மரத்தை ஆம்பூரை சேர்ந்த நகை தொழிலாளி உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
ஆம்பூர் ஷராப்பஜார் தெருவை சேர்ந்தவர் தேவன் (50). நகை தொழிலாளி. தங்கத்தை பயன்படுத்தி அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பல்வேறு பொருட்களை உருவாக்கியவர்.
திருக்குறள் புத்தகம், கிரிக்கெட் உலககோப்பை, கால்பந்து உலககோப்பை, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் தங்க கம்பி உருவங்கள் உட்பட பல்வேறு தங்க உருவங்களை உருவாக்கியுள்ளார்.
தற்போது அவர் 4 இன்ச் உயரத்திலான தங்க கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ளார். இதில் உள்ள இலைகளை 1 செமீ அளவில் தயார் செய்துள்ளார். இதற்காக 5.250 கிராம் தங்கத்தை பயன்படுத்தியுள்ளார். 24 மணி நேரத்தில் இதனை செய்துள்ளார்.
ரூ.15 ஆயிரம் மதிப்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறிய தங்க கிறிஸ்துமஸ் மரம் இது லிம்கா மற்றும் இதர சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தங்கத்தாலான இந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஆம்பூரை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

