வடக்கில் புதிய கூட்டணி உதயமாகியது!

220 0

மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர். 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று ( 06.12) காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் மூத்த அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ. ஆணந்தசங்கரியுடன் சந்தித்து கலந்துரையாடினர்.

அந்த சந்திப்பின் பின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய ஒரு கூட்டணி அமைத்து அந்த கூட்டணியின் ஊடாக தேர்தலை எதிர்கொள்வதற்குரிய பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்.

அந்த பேச்சுவார்த்தையின் போது, தற்போதைய சூழ்நிலையில் புதிய மாற்று அணி ஒன்று தேவை என்பதன் அடிப்படையில் புதிய கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

அந்த கூட்டணியில், ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்), புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள், சமூக சமத்துவத்தினை ஊக்குவிக்கும் பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளன.

தற்போதைய மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து இப்புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறும் புதிய கூட்டணியினர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பொதுச் சின்னமாக உதயசூரியன் 

தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழினத் தலைவர் தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியாலும் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸாலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமானஉதயசூரியன் சின்னத்தையே இப்புதிய கூட்டமைப்பு தனது பொதுவான தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அதுமட்டுமன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்த போது உதயசூரியன் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக இடைப்பட்ட காலத்தில் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாக இருந்ததுடன், மீண்டும் ஒற்றுமையின் சின்னமாக, தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தும் சின்னமாக, தமிழ் மக்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும் சின்னமாக உதய சூரியனை பொதுச் சின்னமாக தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாக புதிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

எமது முன்னாள் தலைவர்களால் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு என்பது தமிழர்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரித்தான சுய நிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்பட்டு ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கான சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும்.

அதுவே அவர்களின் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரே வழி என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கையாகவும், நோக்கமாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்படுகின்றது.

இந்த அடிப்படையிலேயே எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதெனவும் இக்கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

எமது கொள்கைகள் மற்றும் நோக்கங்களை ஏற்றுக்கொண்ட சகலஅரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் சிவில் அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பணி புரிய வருமாறும் புதிய கூட்டணியினர் மேலும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a comment