இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட ஈரான் துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தது

15019 0

இந்தியாவின் நிதி உதவியுடன் அண்டை நாடான ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவின் நிதி உதவியுடன் அண்டை நாடான ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பாகிஸ்தான் வழியாகவே இந்தியாவில் இருந்து கடல் வழி வர்த்தகம் நடந்து வந்தது. ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அனுமதி மறுத்தது. சீனா உதவியுடன் பாகிஸ்தானின் கவாடரில் துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதையடுத்து, ஈரானில் ஓமன் வளைகுடா பகுதியில், அரபிக்கடலை ஒட்டியுள்ள சபாஹர் பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணியை இந்தியா தொடங்கியது. இதற்காக சுமார் 3,300 கோடி ரூபாய் நிதி உதவி ஒதுக்கியுள்ளது.

இதற்கிடையே, சபாஹர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதற்காக 2,200 கோடி ரூபாய் செலவானது.

வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில் தெஹ்ரானுக்கு சென்று துறைமுக பணிகளை பார்வையிட்டார், மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி இந்த துறைமுகத்தை நேற்று பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதனால் 25 லட்சம் டன்னாக இருந்த இந்தத் துறைமுகத்தின் கையாளும் திறன், 85 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 5 கப்பல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே இந்தியப் பெருங்கடல் வழியாக ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான துாரம் வெகுவாகக் குறைந்துள்ளது. தொடக்க விழாவில் இந்தியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இதன் அறிமுக விழாவில் பேசிய அதிகாரிகள், நிலம், கடல் மற்றும் வான்வெளியுடன் இந்த துறைமுகத்தை இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment