தொப்பி சின்னத்துக்கு கடுமையான போட்டி: 8 சுயேட்சைகள் கேட்கிறார்கள்

26060 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 8 சுயேட்சைகளும் தொப்பி சின்னம் ஒதுக்குமாறு கேட்டு இருக்கிறார்கள். எனவே தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது. அப்போது அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. இப்போது அ.தி.மு.க. பெயர் கொடி சின்னம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வழங்கப்பட்டது.

இரட்டை இலை முடக்கப்பட்டபோது தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. இப்போது அவர் சுயேட்சையாக போட்டியிடுவதால் மீண்டும் தொப்பி சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரியிடம் கேட்டு இருக்கிறார்.

மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கிலும் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார். இதுபற்றி தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி எஸ்.பி.கார்க் கருத்து தெரிவித்தார்.

எனவே தேர்தல் அதிகாரிக்குத்தான் சின்னம் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. தற்போது தொப்பி சின்னம் கேட்டு தினகரன் தவிர ஆர்.கே.நகரில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 8 சுயேட்சைகளும் தொப்பி சின்னம் ஒதுக்குமாறு கேட்டு இருக்கிறார்கள்.

எனவே தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமி‌ஷன் விதிப்படி ஒரு சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒதுக்கப்படும். எனவே தொப்பி சின்னமும் குலுக்கல் முறையில் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட இருக்கிறது.

குலுக்கல் சீட்டில் 8 வேட்பாளர்களுடன் தினகரன் பெயரும் இடம்பெறும். வேட்பாளர்கள் முன்னிலையில் சீட்டுகளை குலுக்கி போட்டு எடுக்கும்போது யார் பெயர் வருகிறதோ அவருக்கே தொப்பி சின்னம் ஒதுக்கப்படும். இதனால் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? என்பது குலுக்கலின்போது தான் தெரியவரும்.

தொப்பி சின்னம் கிடைக்காவிட்டால் கிரிக்கெட் மட்டை அல்லது விசில் ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு தினகரன் கேட்டிருக்கிறார்.

கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தலையில் தொப்பி அணிந்து வாக்கு சேகரித்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் தொப்பி தலைகளாக காட்சி அளித்தது. இது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்காளர்கள் மத்தியிலும் எளிதில் சின்னம் பதிவானது.

எனவேதான் தற்போது இந்த தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட தினகரன் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் 8 பேர் கேட்பதால் குலுக்கல் முறையில் கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

Leave a comment