யேர்மனியில் உணர்வுபூர்வமாக நிகழ்ந்தேறிய தமிழீழ தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்.

22058 0

தமிழீழ விடுதலை எனும் உயர்ந்த இலட்சியத்தை அடைந்துகொள்ளும் விருப்பினை ஆழ்மனதில் பதித்து, அவ் இலட்சிய வேட்கை கொண்ட தியாகப் பயணத்தில், தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில், காலங்கள் கையளித்த வடிவங்களை ஏற்றுநின்றும், துணிந்து சென்றும் அதி உன்னத கொடையாக தமது உயிர்ப்பூவை வீசி, எங்கள் மனங்களில் கொலுவிருக்கும் உன்னத மாவீரரை ஒருசேர நினைவிருத்தி, வணக்கம் செலுத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் பல்லாயிரம் மக்களின் பங்கேற்புடன், யேர்மனியில் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப் பெற்றது.

மாவீரர்களின் பெற்றோர்களும், உரித்துடையோரும் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பெற்ற பகுதியில் மதிப்பளிக்கப் பெற்று, அதனைத் தொடர்ந்து அவர்கள் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்வின் பொதுச்சுடரினை யேர்மனியின் சுவேற்றா நகர அம்மன் ஆலையை பிரதமகுரு ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ மக்களவையின் செயற்பாட்டாளர் திரு. விபீசணன் ஏற்றிவைத்தார்.

தமிழீழ தேசியத் தலைவரின் இறுதி மாவீரர்நாள் உரையின் ஒருபகுதி ஒளிபரப்பு செய்யப்பட்டு இவ்வாண்டுக்கான மாவீரர்நாள் அறிக்கையும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து சரியாக பிற்பகல் 1.35 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டு 1.37 மணிக்கு பொதுஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுஈகைச்சுடரினை  கடற்புலி கப்ரன் பூவேந்தன், மற்றும் கடற்புலி லெப். கேணல் சலீம், அவர்களின் சகோதரி திருமதி. மேனகா தமிழ்மாறன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து மக்கள் மாவீரர்களுக்கான சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

இந்நிகழ்வுகளின் சமநேரத்தில், யேர்மனியின் எசன் நகர்ப்பகுதியில் அமைக்கப்பெற்றுள்ள நினைவுத் தூபியில் நிகழ்ந்த வணக்க நிகழ்வுகளும், தாயாக மண்ணில் நிகழ்ந்துகொண்டிருந்த வணக்க நிகழ்வுகளும் இணைய வழிமூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கில், தமிழீழ இசைக்குழுவின் இசைவணக்கம், கவிவணக்கம், கார்த்திகை தீபம் இதழின் வெளியீடு,நடனங்கள்,வயலினிசை,நாடகம், நாட்டிய நடனங்கள், சிறப்புரை என்பன நடைபெற்றது. தமிழீழ விடுதலை புலிகளின் மட்டு அம்பாறை மவட்டங்களின் முன்னைநாள் அரசியல்துறை பொறுப்பாளர் திரு. தயாமோகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

யேர்மனியில் இவ்வாண்டு நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ணப் விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பும், பரிசில் வழங்கலும் இடம்பெற்று, உறுதியுரை எடுக்கப்பெற்று, தேசியக்கொடி இறக்கப்பெற்று, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் கோசப்பாடல் முழக்கத்துடன் நிகழ்வுகள் இரவு 8.00மணியளவில் நிறைவு பெற்றது.

மிகவும் உணர்வுபூர்வமாக,மக்கள் பெருமளவில் திரண்டு எமது திருநாட்டின் காவல் தெய்வங்களாக பூசிக்கப்படும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

Leave a comment