இரட்டை இலை சின்னம் இருக்கும் இடமே உண்மையான அ.தி.மு.க.: உதயகுமார் எம்.பி

263 0

இரட்டை இலை இருக்கும் இடமே உண்மையான அ.தி.மு.க. என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக உதயகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது. மேலும் கட்சியின் பெயரையும், கொடியையும் அவர்கள் பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தியது.

இதனால் விலகிச் சென்ற பல்வேறு அ.தி.மு.க. நிர்வாகிகள் மீண்டும் முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்வரிசையில் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயகுமார் எம்.பி. தெரிவித்ததாவது:-

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஆரோக்கியமான நிலை இல்லை. அணிகள் பிரிந்ததால் கட்சி, சின்னம் முடக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். தற்போது தேர்தல் கமி‌ஷன் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

கட்சியும், இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்து இருப்பதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன். இரட்டை இலை சின்னம் இருக்கும் இடமே அ.தி.மு.க. என்னைபொருத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வளர்த்த அ.தி.மு.க.வுக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் எப்போதும் விசுவாசமாக இருப்போம் என்று தெரிவித்தார். மேலும் அணி மாறியது குறித்து கேட்ட போது தினகரன் அணியில் இருந்த எம்.பி.க்கள் அனைவரும் கலந்து பேசிதான் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றார்.

Leave a comment