ஆஸ்திரேலியா நடத்தி வந்த அகதிகள் மையத்தில் போலீஸ் நுழைந்ததால் பதற்றம்

101630 0

ஆஸ்திரேலியா நடத்தி வந்த அகதிகள் மையத்துக்குள் பப்புவா நியூ கினியா போலீசார் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போர், உள்நாட்டுப்போர் போன்ற காரணங்களால் பிற நாடுகளில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்தவர்களை பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய நாடான மேனஸ் தீவு மற்றும் நவ்ருவில் உள்ள அகதிகள் மையத்தில் ஆஸ்திரேலியா தங்க வைத்தது. ஆனால் இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று பப்புவா நியூ கினியா கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அந்த அகதிகள் மையத்தை ஆஸ்திரேலிய அரசு கடந்த மாதம் 31-ந் தேதி மூடி விட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் அங்கு 420 அகதிகள் இருந்தனர்.

அப்போது அந்த அகதிகள் மையத்துக்குள் பப்புவா நியூ கினியா போலீசார் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அங்குள்ள அகதிகள் ஒரு மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று போலீசார் கூறினர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, “35 ஆண் அகதிகள் இந்த மையத்தில் இருந்து தாமாகவே வெளியேறி விட்டனர்” என்றனர். அதே நேரத்தில் மற்றவர்கள், அங்கிருந்து வெளியே போனால் உள்ளூர் மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறி மறுத்து விட்டனர்.

அங்கிருந்து ஒவ்வொருவரும் வெளியேறி விட வேண்டும் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டுக்கொண்டே இருந்தனர்.

சூடான் அகதி ஒருவர் பி.பி.சி.யிடம் கூறும்போது, “ இங்குள்ள அறைகளை எல்லாம் போலீசார் சூறையாடி விட்டனர். எங்கள் உடைமைகளை அழித்து விட்டனர்” என்றார்.

அகதியாக அங்கு இருந்த ஈரான் பத்திரிகை நிருபர் பெஹ்ரூஸ் பூச்சானி கைது செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.