வடக்கு கல்வி அமைச்சரின் பதவி பறிபோகிறதா?

310 0
 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகியதையடுத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் ஆளும் கட்சி உறுப்பினர் என்ற தகுதியை இழந்துள்ளார் எனத் தெரிவித்து அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கும் பணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபட்டுள்ளது. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இல்லாத கட்சியின்  உறுப்பினர் ஒருவர் அமைச்சர் பதவியில் இருக்க முடியாது என வடக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் உள்ளனர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப்பைச் சேர்ந்தவர் என்பதுடன் அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர்.
அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கையொப்பமிட்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்கும் பேச்சுக்கள் இடம்பெறுவதாகத் தெரியவருகிறது.
இந்த முயற்சி தொடர்பில் முதலமைச்சருடன் நெருங்கிய தரப்பு அவருடன் பேசியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, புதிய கல்வி அமைச்சராக ரெலோ உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவதற்கும் முதலமைச்சருடன் பேச்சு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
முல்லைத்தீவு உறுப்பினர் து.ரவிகரனுக்கு அந்தப் பதவியை வழங்க ஒரு தரப்பு முயற்சி செய்தாலும் அவர் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்துள்ளதால் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் அது சாத்தியமற்றது எனக் கூறப்பட்டது.

Leave a comment