மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!

322 0
மருமகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு  7 ஆண்டுகள் கடூழியச் சிறை -யாழ்.மேல் நீதிமன்று தீர்ப்பு
மருகனை கத்தியால் குத்திக்கொலை செய்த மாமனாருக்கு கைமோசக் கொலைக் குற்றத்தில் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.
இந்த வழக்கின் இரண்டாவது எதிரியான இறந்தவரின் மனைவியின் சகோதரனும் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கான தண்டனை 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டது. மற்றொரு எதிரி குற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இளம் குடும்பத் தலைவரான  தங்கராஜா சரத்பாபு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பில் இறந்தவரின் மனைவியின் தந்தை, மனைவியின் சகோகதரன் மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மூவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று வழக்குத் தொடுனர் மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இடம்பெற்றன.
“இறந்தவர், தனது மனைவியை தொடர்ச்சியாக துன்புறுத்திவந்தார். சம்பவ தினத்தன்றும் அவர் மனைவியைத் தாக்கினார். அதனால் காயமடைந்த மனைவி, தனது தந்தையிடமும் சகோதரனிடமும் தொலைபேசியில் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
அங்கு சென்ற இந்த வழக்கின் இரண்டாவது எதிரி சகோதரியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த இறந்தவரின் மாமனார் ( மனைவியின் தந்தை), மருமகனுடன் பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன்போதே இறந்தவரானா மருமகனுக்கு முதலாவது எதிரி கத்தியால் குத்திவிட்டார்” என்று எதிரிகள் தரப்புச் சட்டத்தரணி வி.திருக்குமரன் தனது தொகுப்புரையில் தெரிவித்தார்.
இரு தரப்பு தொகுப்புரைகளையும் ஆராய்ந்த நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்.
“இந்த வழக்கில் எதிகள் மீது பொது எண்ணத்துடன் கொலை செய்தனர் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அது சாட்சிகளின் அடிப்படையில் எண்பிக்கப்படவில்லை.
இந்த வழக்கிலிருந்து 3ஆம் எதிரி விடுவிக்கப்படுகிறார். முதலாம் எதிரி, அந்த நேரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தின் அடிப்படையிலும் மதுபோதையில் இருந்த காரணத்தினாலும் கத்தியால் குத்திவிட்டார் என்ற எண்ணத்துக்கு மன்று வருகிறது. கைமோசக் கொலைக் குற்றத்தைப் புரிந்தார் என்ற அடிப்படையில் அவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இரண்டாவது எதிரி இறந்தவரைத் தாக்கியுள்ளார். அதனால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டணை 5 ஆண்டுகளுக்கு  ஒத்திவைக்கப்படுகிறது. இரண்டாம் எதிரி 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளச்செழியன் தீர்ப்பளித்தார்.
வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார்.

Leave a comment