பல்லவன் இல்லம் தி.மு.க. ஆட்சியில் அடகு வைக்கப்பட்டது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

248 0

அரசு போக்குவரத்துக் கழக தலைமையிடமான பல்லவன் இல்லம், தி.மு.க. ஆட்சி காலத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழக தலைமையிடமான பல்லவன் இல்லம், தி.மு.க. ஆட்சி காலத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடமாக இருக்கும் பல்லவன் இல்லம் ரூ.7.50 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்பது பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

ஆனால் பல்லவன் இல்லம் மட்டுமல்ல மேலும் 7 இடங்களை 1997 முதல் 2007 வரை அடமானம் வைத்து ரூ.30.50 கோடி கடன் வாங்கியது தி.மு.க. அரசு என்பதை அவர் மறந்துவிட்டு பேசுகிறார்.

அயனாவரம் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் 1997-ம் ஆண்டு டிசம்பரில் அதிகப்பற்று பெறுவதற்காக கனரா வங்கியிடம் அடகு வைக்கப்பட்டது. அதுபோல மந்தைவெளி பணிமனை மற்றும் பேருந்து நிலையம் (1999-ம் ஆண்டு அக்டோபர், கனரா வங்கி), பட்டுலாஸ் சாலை பணிமனை (1998-ம் ஆண்டு மார்ச், ஐ.ஓ.பி. வங்கி), அண்ணாநகர் மேற்கு பணிமனை மற்றும் பேருந்து நிலையம் (1999-ம் ஆண்டு ஏப்ரல், ஐ.ஓ.பி. வங்கி), அம்பத்தூர் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் (2007-ம் ஆண்டு பிப்ரவரி, ஐ.ஓ.பி. வங்கி), பல்லவன் இல்லம் தலைமை அலுவலகம் (1997-ம் ஆண்டு பிப்ரவரி, இந்தியன் வங்கி),

பேசின் பாலம் பணிமனை (2007-ம் ஆண்டு மே, விஜயா வங்கி), திருவான்மியூர் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் (2006-ம் ஆண்டு நவம்பர், யூகோ வங்கி) ஆகியவை தி.மு.க. காலத்தில் ரூ.30 கோடிக்கு அடகு வைக்கப்பட்டன.போக்குவரத்துக் கழகங்கள் லாபத்துக்காக இயக்கப்படாமல் மக்கள் சேவைக்காக இயக்கப்படுகின்றன. எனவே அவை நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. அதற்காக அடகு வைப்பது என்பது இயல்பானதுதான்.

அ.தி.மு.க. ஆட்சியில் தான் அடகு வைப்பது போலவும், தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்கியது போலவும் அவர் கூறியதால் இந்த விளக்கம் அளிக்க வேண்டியதுள்ளது. கடனுக்காக அடகு வைப்பது எப்போதும் நடப்பது தான்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் சேமநல நிதி, ஓய்வூதியம், காப்பீடுகள் போன்றவற்றை போக்குவரத்துக் கழகங்களுக்காக பயன்படுத்திய காரணத்தால், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பயன்கள் கிடைக்காததால் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுக்கால பலன்களின் நிலுவைத் தொகை கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-11-ம் ஆண்டுகளில் ரூ.922 கோடியாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.1,232 கோடியாக உள்ளது.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை தி.மு.க. ஆட்சியில் ரூ.929 கோடியாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.3 ஆயிரத்து 50 கோடியாகவும் உள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்கிய தொகை தி.மு.க. ஆட்சியில் ரூ.3 ஆயிரத்து 685.89 கோடியாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.10 ஆயிரத்து 513 கோடியாகவும் உள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் செலவினங்களும் உயர்ந்துள்ளன. கடந்த தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துக் கழக பணியாளரின் சராசரி மாத சம்பளம் ரூ.21 ஆயிரமாக இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் அது ரூ.39 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது.

அதுபோல டீசலின் விலை தி.மு.க. ஆட்சியில் ரூ.43.10 ஆகவும், அ.தி.மு.க. ஆட்சியில் அது ரூ.60.79 ஆகவும் உயர்வு பெற்றுள்ளது. பேருந்தின் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 26 மண்டலங்களையும் உள்ளடக்கிய 8 போக்குவரத்து கழகங்களில் மொத்த 22 ஆயிரத்து 203 பேருந்துகள் இயங்குகின்றன. காலாவதியான பேருந்துகள் படிப்படியாக மாற்றப்படும். மழைக்காலத்துக்கு முன்பு பஸ்களில் நீர் ஒழுகாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கு கூடுதலாக 2 ஆயிரம் புதிய பஸ்கள் வரவுள்ளன. அவற்றில் 40 பஸ்களில் படுக்கை வசதியும், 10 பஸ்களில் கழிவறை வசதியும் வைக்கப்பட உள்ளது. பேட்டரி பஸ்கள் இங்கு வரவுள்ளன. அதை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக ஒரு பஸ், டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 100 மின்சார பஸ்கள் சென்னையில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment