ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுவரும் 28ஆவதுகாலக்கிரம மீளாய்வு செயற் குழு கூட்டத்தொடரில் இன்று புதன்கிழமை இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளது. இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை எவ்வாறான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.
விசேடமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பெல்ஜியம் , எஸ்டோனியா, நோர்வே, போர்த்துக்கல் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் கேள்விகளை எழுப்பவுள்ளன.
இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டு கேள்விகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளன. இதில் அமெரிக்காவும் பிரிட்டனும் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெ ளியிட்டுள்ளன.
அதாவது அரசாங்கம் எப்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் நீதியான நம்பகரமான விசாரணைப் பொறிமுறையை முன்வைக்கும்?
சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளது? காணி திருப்பி அளிக்கப்படாத மக்களுக்கு எவ்வாறு நட்டஈடு வழங்கப்படும்?
ஜெனிவா பிரேரணையின் பிரகாரம் அரசாங்கம் எப்போது பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறையை எப்போது முன்வைக்கும்?
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதில் அரசாங்கம் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளது?பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படும் புதிய சட்டம் சர்வதேச தரத்தை பிரதிபலிக்குமா? இவ்வாறு பல்வேறு கேள்விகள் நாடுகளினால் எழுப்பப்பட்டுள்ளன. இந்த கேள்விகளுக்கு ஜெனீவா சென்றுள்ள பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மீளாய்வுக்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் 25 பக்க தேசிய அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் இலங்கை மீதான அவனதானிப்புக்களை 12 பக்க அறிக்கையாகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள் 22 பக்கங்களில் இலங்கை குறித்த அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளன.
இலங்கை முன்வைத்துள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கமானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதுவரை வடக்கு, கிழக்கில் 24 ஆயிரத்து 336 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலக்கிரம மீளாய்வு பொறிமுறையின் பிரகாரம் ஐக்கிய நாடுகளின் அனைத்து அங்கத்துவ நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைமைகளை தலா ஐந்து வருடங்களுக்கு ஒருதடவை வருடாந்தம் நடைபெறும் 3 செயற்குழு அமர்வுகளின் போது மீளாய்வு செய்யப்படுகின்றன. அதன் பிரகாரம் வருடமொன்றில் சர்வதேசத்தில் உள்ள 42 நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுகிறது.
அந்தவகையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் முதலாவது தடவையாகவும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது தடவையாகவும் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பல்வேறு பரிந்துரைகளைக் கொண்ட இறுதி அறிக்கையும் இதன்போது நிறைவேற்றப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் அந்தப்பரிந்துரைகளின் பிரகாரம் இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பில் இம்முறை மீளாய்வு செய்யப்படும் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.

