பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது!

1817 0

வடக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் சாளுவன் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்களுக்கு வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கடந்த 10.11.2017 வெள்ளிக் கிழமை அன்று சுழிபுரம் சாளுவன் பகுதியில் நடைபெற்றுள்ளது. மீன்பிடி வலைகளை வழங்கிய அமைச்சர் தொடர்ந்து அங்கு பேசுகையில்..

நாம் செய்யும் இந்த உதவியானது உங்கள் வாழ்க்கையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து இயன்ற தொகையை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.

உங்கள் கிராமங்களைப் போன்ற பல கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டியிருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகம் என்ற வகையிலும் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் தரத்தையும் சமூக அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கு வடக்கு மகாணசபை முதலமைச்சருடைய தலைமையில் நாங்கள் செயற்பட தயாராக இருக்கிக்கின்றோம்.

அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும். இந்த சங்கத்தை வினைத்திறனுடையதாக ஆக்குவதற்கு நல்லதொரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம்தான் பல உதவிகளை எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

பல்வேறு சங்கங்களில் இருந்து முன்வைக்கப்படும் தேவைகள் குறித்து பரிசீலித்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். வினைத்திறமையுடன் சங்கத்தை கொண்டு நடத்தக் கூடியவர்களை தலைமைப்பொறுப்பில் நியமிப்பதன் மூலமே உங்கள் பிரச்சினைகள் குறித்து உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களையோ தொடர்புகொள்ள முடியும்.

இனிவரும் காலங்களிலும் எம்முடன் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் எம்மால் இயன்ற உதவிகளை உங்களுக்கு செய்யக் கூடியதாக இருக்கும். நாங்கள் உங்களுடைய மக்கள் பிரதிநிதிகள். உங்களுடைய வாக்குகளால்தான் மக்கள் பிரதிநிதிகளாகி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உங்களுக்கு இருக்கும் தேவைகள் மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பில் எங்களுக்கு தெரியப்படுத்துவதன் ஊடாக எவ்வளவுக்கு எம்மால் செயற்படுத்த முடிகின்றதோ அதனை செய்ய முடியும் என்றும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a comment