காற்றழுத்த தாழ்வு நகருகிறது: சென்னையில் 24 மணிநேரம் பரவலாக மழை நீடிக்கும்

328 0

காற்றழுத்த தாழ்வு பகுதியான தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து புதிதாக தென்கிழக்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தென் மேற்கு திசையில் நகர்ந்ததால் கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதியான தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி மேலும் நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக வட கடலோர தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பகலில் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை இடைஇடையே பலமாக கொட்டியது. விடியவிடிய இடைவிடாமல் மழை நீடித்தது. காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது.

மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவிகள்

நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் காலையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழை லேசாக தூரிக் கொண்டே இருந்ததால் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

மழைக்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்களை விட பஸ் பயணமே பாதுகாப்பு என்பதால் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனர்.

சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. வேப்பேரியில் பள்ளி முன்பு தேங்கிய மழைநீரில் போடப்பட்ட தடுப்புகள் மீது ஏறிச் செல்லும் மாணவிகள்.முன்பு 15 நிமிடத்துக்கு ஒருமுறை பஸ் வரும். தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுவதால் 30 நிமிடத்துக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார்கள்.

Leave a comment