மோடி- ட்ரம்ப் பிலிப்பைன்ஸில் சந்தித்து பேச்சு

474 0

ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வியட்நாமில் சமீபத்தில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அந்நாடு பிரமாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்கிறார்” எனக் கூறினார்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், தென் கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்துள்ள ஆசியான் அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு இன்று (திங்கட் கிழமை) தொடங்கியது. இதில் ஆசியான் நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டுக்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் தனியே சந்தித்துபேசினர்.

பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது:

”அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். இதன் மூலம் இருநாடுகளுடனான உறவு மேலும் வலுப்பெறும். இருநாடுகளின் உறவைத் தாண்டி, உலக அளவிலான பிரச்சினைகள், மனிதநேய நலத்திட்டங்கள் போன்றவற்றிலும் இணைந்து செயல்பட முடியும்” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் பேசியதாவது:

”பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பராக திகழ்கிறார். மிக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து நல்ல தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இருவரும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றுவோம்” எனக் கூறினார்.

Leave a comment