ரவீந்திரநாத் தாகூர் தங்கி இருந்த லண்டன் வீட்டை வாங்க மம்தா பானர்ஜி விருப்பம் – நினைவு இல்லம் அமைக்க திட்டம்

6958 0

லண்டனில் ரவீந்திரநாத் தாகூர் தங்கி இருந்த வீட்டை வாங்கி நினைவு இல்லம் அமைக்க மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த புகழ்பெற்ற புலவரும், இந்திய தேசியகீதத்தை இயற்றியவருமான ரவீந்திரநாத் தாகூர் தனது ‘கீதாஞ்சலி’ புத்தகத்தை மொழி பெயர்ப்பதற்காக கடந்த 1912-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தார். அப்போது வடக்கு லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் பகுதியில் உள்ள எண் 3, ஹீத் வில்லாஸ் என்ற வீட்டில் சில மாதங்கள் அவர் தங்கிஇருந்தார்.

இந்த வீட்டை வாங்கி அதை தாகூரின் நினைவில்லமாக மாற்ற மேற்கு வங்க அரசு முயன்று வருகிறது. இதில் அதிக ஆர்வம் காட்டி வரும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த 2015-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்த போது இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போதும் அவர் இங்கிலாந்தில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே அவர் தாகூரின் வீட்டை வாங்குவது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் தினேஷ் பட்நாயக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீட்டை வாங்குவதற்கு மம்தா பானர்ஜி அதிக ஆர்வம் காட்டுவதாக, அவருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீட்டின் விலை சுமார் 27 லட்சம் பவுண்டுகளாக (சுமார் ரூ.27 கோடி) நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment