சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

248 0

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்த பெய்துவரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வழக்கத்தைவிட அதிகளவில், அதாவது 68 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பலத்த மழை காரணமாக வெள்ளக் காடான சென்னை இப்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.

ஆனால், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவிற்கு குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

ஆனால் மாலையில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தரமணி, பெருங்குடி, தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment