நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைப்பதா?: சீமான் கண்டனம்

289 0

ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் முயற்சிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மக்களோடு முதன்மையாய் களத்தில் நின்ற அப்பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான தம்பிகள் அன்புச்செல்வன், ஜானகிராமன், ரவி மற்றும் சமூகச்செயற்பாட்டாளர் திலக் ஆகியோர் மீது 6 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் பிணையில் வர இயலாத வகையில் வழக்குத் தொடுத்துச் சிறையிலடைத்திருக்கிறார்கள்.

இவ்வழக்கில் முதன்மையானவராக வரலாற்றுப் பேராசிரியர் ஐயா ஜெயராமன் சேர்க்கப்பட்டிருக்கிறார். இத்தோடு, நன்னிலம் பகுதியைச் சேர்ந்த உத்தமன், சுரேசு, உதயகுமார், அலாவுதீன் ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் போராட்டத் தீயினை ஊதிப்பெரிதாக்கி பற்றிப் பரவச்செய்யுமே ஒழிய, அவற்றினை அணைக்காது என்பது சமகாலப் போராட்ட வரலாறுகள் சொல்லும் பாடமாகும். மண்ணிற்கும், மக்களுக்கும் கேட்டைத்தரும் இக்கொடிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்.

9 பேர் மீதும் புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment