இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மூவர் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுக்கள்

5288 0

இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 12 பேர் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று ஆள்கொணர்வு மனு தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில் 9 பேரின் மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு 9 மனுக்களும் மாற்றப்பட்டுள்ளன. அந்த 9 பேரின் சார்பாக மீளவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அவை தற்போது மற்றொரு மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ளமையாலேயே நிராகரிக்கப்பட்டன என்ற யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார்.
ஏனைய 3 பேர் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அந்த மனுக்களில் யாழ்ப்பாணம் இராணுவக் கட்டளைத் தளபதி, இராணுவத் தளபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a comment