புத்தளம் – மதுரங்குளி விபத்து – விசேட மருத்துவர்கள் தொடர்பில் விசாரணை

20137 195

புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுவந்த வேளையில், அந்த மருத்துவமனையின் சத்திரசிகிச்சை மருத்துவர்கள் இருவர் மருத்துவமனையில் இல்லாமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

எவ்வாறாயினும் விபத்து இடம்பெற்றதை அடுத்து காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற வேளையில், விசேட மருத்துவர்கள் இருவர் சேவையில் இல்லாதிருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்திரசிகிச்சை மருத்துவர்களின் தேவை அத்தியாவசியமாக இருத்த வேளையில், அவர்கள் மருத்துவமனையில் இல்லாமை வருத்தத்திற்குரிய விடயம் என விபத்தில் காயமடைந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் சத்திரசிகிச்சை மருத்துவர்கள் இருவர் அந்த தருணத்தில் மருத்துவமனையில் சேவையில் இல்லாதிருந்தமை தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட் தெரிவித்தார்.

Leave a comment