அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வடகொரிய ஏவுகணைகள் விரட்டப்படும்: ஜப்பானில் டிரம்ப் பேச்சு

359 0

வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வானத்தை விட்டு ஜப்பான் விரட்டி அடிக்கும் என முதன் முறையாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்கவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் கிழக்காசிய நாடுகளுக்கு முதன் முறையாக டொனால்ட் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும் அவர் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ள ஆசிய ஒத்துழைப்பு உச்சிமாநாடுகளில் பங்கேற்கிறார்.

தனது பயணத்தில் முதல் நாடாக ஜப்பான் சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் டிரம்ப் – அபே இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘வடகொரியாவின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஜப்பான் முழுஅளவில் தயாராக உள்ளது. தேவைப்பட்டால் வடகொரியாவின் ஏவுகணைகளை வீழ்த்துவோம். அமெரிக்காவிடமிருந்து பெரிய தொகைக்கு ராணுவ உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது’ என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசினார்.

இதனையடுத்து பேசிய டிரம்ப், ‘அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் வடகொரியாவின் ஏவுகணைகளை ஜப்பான் வானத்தை விட்டு வெளியே விரட்டியடிக்கும்.’ என குறிப்பிட்டார். மேலும், ஜப்பான் மற்றும் தென்கொரியா அதிகளவிலான நவீன ஆயுதங்களை வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு முறை ஜப்பான் பகுதிகளுக்கு மேலாக தனது ஏவுகணைகளை வடகொரியா சோதித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment