வியட்நாமை தாக்கியது தாம்ரே புயல்!

349 0

ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வியட்நாம் கடற்பகுதியில் மையம் கொண்டுள்ள தாம்ரே புயலினால் 19 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

வியட்நாம் நாட்டின் தனாங் நகரில் வரும் 10-ம் தேதி ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு கடற்பகுதியில் நேற்று முன்தினம் உருவாகிய தாம்ரே புயல் வலுவடைந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. 90 கி.மீ வேகத்தில் வீசிவரும் காற்று காரனமாக ஆயிரக்காணக்கன வீடுகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள்  மற்றும் மின் கம்பங்கள் விழுந்ததால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெற உள்ள தனாங் நகரில் இருந்து 310 மைல்கள் தொலைவில் இருக்கும் நாதரங் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தென் சீனக்கடலில் சென்று கொண்டிருந்த 61 பேர் சென்ற கப்பல்கள் கவிழ்ந்ததில் 25 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை.

இதுவரை 19 பேர் புயலுக்கு பலியானதாகவும், 33 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வீசிய புயலில் 80 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூறத்தக்கது.

Leave a comment