யுத்தத்தை நிறைவுசெய்த பின்னர் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பதற்கு நான் ஆவலாக இருந்தேன். அது குறித்து சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வை முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.
எனவே அது தொடர்பில் பேச்சுவார்த்ததை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சியிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தேன். எனினும் அக்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கெளரவமளிக்கப்படவேண்டிய தேரர் கள், தற்போது சிலருக்கு காவிதாரிகளாகியுள்ளனர். எனினும் நாம் தேரர்களுக்கு வழங்க வேண்டிய கெளரவத்தினை என்றும் வழங்கிவருகிறோம்.
மேலும் தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பிலேயே பேசப்படுகிறது. அவ்வாறானதொரு அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. அரசியலமைப்பு சபையொன்றை உருவாக்குவதாயின் அதற்கு மக்களின் ஆணை அவசியமாகும். அதற்கான ஆணையினை மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ வழங்கவில்லை.
மேலும் யுத்தத்தை நிறைவுசெய்யுமாறே மக்கள் என்னிடம் கோரிக்கை முன்வைத்தனர். வேறு எந்த கோரிக்கையினையும் என்னிடம் முன்வைக்கவில்லை. எனவே மக்களின் கோரிக்கையினை நான் நிறைவுசெய்தேன். அதன் பின்னரே நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தேன். ஆகவே 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்ற வடக்கின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தினோம்.
மேலும் நாட்டிலுள்ள தேசிய பிரச்சினை தொடர்பில் எவ்வகையான தீர்வுக்கு வருவதாயினும் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சியிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தேன். எனினும் அவ் அழைப்பினை அத்தரப்பினர் ஏற்கவில்லை.
என்னிடமிருந்து கிடைக்கும் எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என சர்வதேசமும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் கேட்டுக்கொண்டிருந்தன.
அதனாலேயே எனது அழைப்பை ஏற்க வில்லை. மேலும் என்னை தேர்தலில் தோற் கடிப்பதே சர்வதேசத்தினதும் புலம்பெயர் அமைப்புகளினதும் திட்டமாக இருந்தது. அதனாலேயே என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

