அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்.- புகழேந்தி தங்கராஜ்

377 0

புகழேந்தி தங்கராஜ்
சென்னை
அலைபேசி: 9841906290

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்.
உங்களைப் போலவே நானும் ஈழ விடுதலையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவன். நான் இயக்கிய திரைப்படங்களிலும், நான் எழுதுகிற பத்திரிகைகளிலும் ஈழமண்ணின் ஈரத்தையும் வீரத்தையும் தொடர்ந்து பதிவு செய்து வருபவன்.

நான் தமிழ்நாட்டில் பிறந்தவன். அதனாலேயே, ஈழ விடுதலைக்கு உலைவைக்கிற இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிப்பது எனது தலையாய கடமை என்று நினைக்கிறேன். எந்த நிலையிலும் உண்மையைப் பேசுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

1987ல் ராஜீவ்காந்தியும் ஜயவர்தனாவும் ஒப்பந்தம் செய்துகொண்டபோது நான் ஒரு பத்திரிகையாளன். அந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்று மோசடி என்பதை. ராஜீவின் நடவடிக்கைகள் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கின. தனது சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவே தமிழினப் பிரச்சினையைப் பயன்படுத்தியது இந்தியத் தலைமை. வெற்றி இலக்கை எட்டுகிற நிலையில் இருந்த ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ராஜீவ் – ஜயவர்தனா ஒப்பந்தம் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது.

அந்த ஒப்பந்தத்திலிருந்த குளறுபடிகளையும் விடுதலைப் புலிகள் என்கிற விடுதலைப்போராட்ட இயக்கத்தை நசுக்க இந்தியா பல்வேறு வழிகளில் முயன்றதையும் இந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் மோதவிட்டு இலங்கை குளிர்காய்ந்ததையும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட முப்பதாவது ஆண்டில் (1987 – 2017) அதையெல்லாம் நினைவூட்ட வேண்டியது எனது கடமையாகிறது.

நாம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை எம் இனத்தின் இளையோரும் தெரிந்துகொண்டாகவேண்டும். தமிழினத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய ராஜீவ்காந்தியின் நேர்மையின்மையையும் பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல மறுத்த இந்தியத் தளபதியின் நேர்மையையும் திலீபன், குமரப்பா, புலேந்திரன் முதலானோரின் உயிர்களுக்கு உலைவைத்த இந்தியாவின் பொறுப்பின்மையையும் அவர்கள் அறிந்துகொண்டாக வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் 1987ல் ஈழத்தில் என்னதான் நடந்தது – என்பதை ஒரு படக்கதை வடிவில் நூலாகக் கொண்டுவருகிறோம்.

‘ஈழம் 87 – வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம்’ என்கிற இந்த ஓவிய வரலாற்று நூல். மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றைப் பதிவு செய்கிறது. எதையும் மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி விவரிக்கிறது.

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்திய அமைதி காப்புப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரட்சிங் ‘ இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்சித் தியாகதீபம் திலீபன் புலேந்திரன் குமரப்பா – என்று பக்கத்துக்குப் பக்கம் மெய்சிலிர்க்க வைக்கிற வரலாற்று ஓவியங்களுடன் வெளியாகிறது ‘ஈழம் 87’. தமிழில் இப்படியொரு ஓவிய வரலாற்றுப் பதிவு வெளியாவது இதுவே முதல்முறை.

நவம்பர் 4ம் தேதி (4.11.2017 சனிக்கிழமை) சென்னையில் நடக்கும் விழாவில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ‘ஈழம் 87’ நூலை வெளியிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பெறுகிறார். திரைப்படக் கலைஞர் சத்யராஜ் வரலாற்றுக் காட்சிகளை அறிமுகம் செய்கிறார். (அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.)

தமிழரின் தாகம்இ தமிழீழத் தாயகம்.

Leave a comment