ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை

514 0

தமிழக காங்கிரஸ் செயலற்று இருப்பதாக கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழக பொறுப்பாளர் சின்னா ரெட்டி முன்னிலை வகித்தார்.

கராத்தே ஆர்.தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உள்பட மாவட்ட தலைவர்களும், எச்.வசந்தகுமார், பிரின்ஸ் உள்பட எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதாரணி எம்.எல்.ஏ., உள்பட சில எம்.எல்.ஏ.க்களும், மாவட்ட தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில், கராத்தே ஆர்.தியாகராஜன் பேசும்போது, ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக காங்கிரஸ் செயலற்று இருப்பதாக கூறியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கூட்டத்தில், இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா, நவம்பர் 8-ந்தேதி கருப்பு தினம் அனுசரிப்பு, மழை பாதிப்பு நிவாரண பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணியளவில் முடிவடைந்தது.

முன்னதாக சு.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை, சின்னம் பிரச்சினைகளில் அக்கறை காட்டும் அமைச்சர்கள் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் மக்களிடம் இருந்து அ.தி.மு.க. விலகி கொண்டே செல்கிறது.

எம்.ஜி.ஆர்., காமராஜர் ஆகியோர் முதல்-அமைச்சராக இருந்தபோது மழைக்காலங்களில் வேஷ்டியை மடித்துக்கட்டி கொண்டு தண்ணீரில் இறங்கி மக்களை சந்தித்தார்கள். அதுபோன்று முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மக்களை சந்திக்க வேண்டும். 2015-ம் ஆண்டு கசப்பான அனுபவத்தை மனதில் வைத்து போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திரா காந்தி அம்மையாரின் நூற்றாண்டு விழா வருகிற 19-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி கோவையில் 19-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி மேலிட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தஞ்சை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட இடங்களிலும் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ந்தேதி கருப்பு தினமாக, துக்க தினமாக அனுசரிக்கப்பட உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் அன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. வடசென்னையில் கண்டன பொதுக்கூட்டமும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, லண்டன், அமெரிக்காவை விட தமிழகத்தில் மழை பாதிப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ‘ அவர்(எஸ்.பி.வேலுமணி) லண்டன், அமெரிக்காவை போய் பார்த்து வந்தாரா என்ன? பொது அறிவு இல்லாமல் அவர் பேசக்கூடாது. இது வேதனைக்குரியது. கண்டனத்துக்குரியது.’ என்றார்.

மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி உள்பட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Leave a comment