வடமாகாண மரநடுகை மாதம் இன்று ஆரம்பம்!

504 0

வடமாகாண மரநடுகை மாதமாக ஆண்டுதோறும் நொவம்பர் 1 தொடங்கி 30 வரையான ஒருமாத காலப்பகுதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’ என்ற மகுட வாசகத்துடன் கொண்டாடப்படும் மரநடுகை மாதத்தில் ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் மரநடுகை நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு; மரங்கள் – சுற்றுச்சூழலின் பாதுகாவலர்கள் என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்ற மரநடுகை மாதத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று மன்னாரில் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராம பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெறுகின்றது.

தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாள் இம்மாதத்திலேயே அடங்குகிறது. மழைத்தண்ணீரால் நனையும் மாதமாக மாத்திரம் அல்லாமல் தமிழ்மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளது. போரில் உயிர் துறந்த மாவீரர்களின் கூட்டு நினைவாகத் தமிழ் மக்கள் கண்ணீர் உகுக்கும் நாட்களும் இம்மாதத்தினுள்ளேயே அடங்குகின்றன.

மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டைக்கொண்ட தமிழர்கள், மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நாட்டி வைக்கும் மாண்பையும் கொண்டிருக்கிறார்கள். இவற்றின் அடிப்படையிலேயே கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக வடக்கு விவசாய அமைச்சால் 2014ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment