12 கோடி அமெரிக்கர்களை சென்றடைந்த ரஷிய ‘பேஸ்புக்’ பதிவுகள்: புதிய புள்ளிவிவரங்களால் அதிர்ந்தது அமெரிக்கா

328 0

ரஷியாவின் ‘பேஸ்புக்’ பதிவுகள் 12 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை சென்றடைந்துள்ளதாக வெளியான புதிய புள்ளிவிவரங்களின் பதிவு அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை ரஷியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. இதேபோன்று அந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாகி உள்ள டொனால்டு டிரம்பும் மறுத்து வருகிறார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற அமெரிக்க மத்திய புலனாய்வு படை எப்.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு 2 பேர் மீது 2 தினங்களுக்கு முன் குற்றச்சாட்டு பதிவு செய்தது.

இந்த நிலையில் வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்கள், அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.

அது ரஷியாவின் ‘பேஸ்புக்’ பதிவுகள் 12 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை சென்றடைந்துள்ளது என்பதுதான். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் (2015 ஜூன் தொடங்கி 2017 ஆகஸ்டு வரை) 80 ஆயிரம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புள்ளி விவரங்களை, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை ‘ரெயிட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும், ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையும் பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ரஷிய அதிகார மையமான கிரெம்ளினுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ஒரு ரஷிய கம்பெனிதான் இந்த பதிவுகளை செய்துள்ளது. இந்தப் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் மற்றும் அரசியல் செய்திகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இந்த செயல்கள், ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் இலக்குக்கு எதிராக அமைந்துள்ளதாக ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் பொது ஆலோசகர் காலின் ஸ்ட்ரெட்ச் கூறியுள்ளதாக ‘ரெயிட்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.

Leave a comment