கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தந்திரமாக நீக்கப்பட்டார்!

463 0

கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடந்த வியாழக்கிழமை ஓய்வுபெற்று சென்ற போது “கடற்படையில் அதிக காலமும் குறுகிய காலமும் சாதனை படைத்த தமிழ்ர்கள்” என்று தமது செய்திக்குத் தலைப்பிட்டிருந்தது ஆங்கில ஊடகம் ஒன்று.

அட்மிரல் சின்னையாவின் தாய் மொழி சிங்களமாக இருந்த போதும் சின்னையா என்ற அவரது தந்தையின் பெயரை வைத்து தமிழராக அடையாளப்படுத்துவதற்கு கடந்த இரண்டு மாத காலத்தில் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருந்தன.

அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதும், ஓய்வு பெற்றுச் சென்றதும், அரசியல் மட்டத்திலும், பல்வேறு மட்டங்களிலும், கூடுதல் விவாதப் பொருளாக மாறியிருந்தன. அண்மைக்காலத்தில் கடற்படைத் தளபதி ஒருவரின் நியமனம் மற்றும் சேவை நீடிப்பு தொடர்பாக இந்தளவுக்கு விவாதங்களோ, பரிந்துரைகளே இடம்பெற்றதாக தெரியவில்லை.

1982ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து 35 ஆண்டுகள் கடற்படைக்காக சேவையாற்றியிருந்தவர் அட்மிரல் சின்னையா, இலங்கைக் கடற்படையின் எந்தவொரு தளபதியும், சாதித்திராத சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

விடுதலை புலிகளின் 10 ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர், கடற்புலிகளுடன் அதிகளவு கடற்சண்டைகளை நிகழ்த்தியவர், இருந்தாலும் அவரால், இரண்டு மாதங்களுக்கு மேல் கடற்படைத் தளபதியாக நீடிக்க முடியவில்லை.

கடந்த ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி கடற்படைத் தளபதியாக பதவியேற்ற அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு செப்டெம்பர் 26ம் திகதியுடன் 55 வயது நிறைவடைந்தது. 55 வயதை எட்டிய படை அதிகாரிகள் ஓய்வுபெற வேண்டும் அல்லது சேவை நீடிப்பைப் பெற வேண்டும் என்பது கட்டாய விதிமுறை.

கடந்த செப்டெம்பர் 26ம் திகதி ஓய்வுபெற வேண்டியிருந்த அட்மிரல் சின்னையாவுக்கு ஒருமாத சேவை நீடிப்பை மாத்திரம் வழங்கிவிட்டு அமெரிக்கா சென்றிருந்தார் ஜனாதிபதி.

முன்னதாக அட்மிரல் சின்னையா அனுப்பிய சேவை நீடிப்பு விண்ணப்பம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் பாதுகாப்புச் செயலர் கயில வைத்தியரத்னவினால் இழுத்தடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அட்மிரல் சின்னையா நேரடியாக இதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஒரு மாத சேவை நீடிப்பை வழங்கியதாகவும் கலந்துரையாடலாம் என்று அவர் கூறியதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.

முன்னொரு போதும் இல்லாத வகையில் அட்மிரல் சின்னையாவுக்கு ஒருமாத சேவை நீடிப்பை ஜனாதிபதி வழங்கிய போதே பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.

மீண்டும் ஒரு சேவை நீடிப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் சேவை நீடிப்பு வழங்கப்படாமலேயே கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

இலங்கைக் கடற்படையில் அதிக காலம் தளபதியாக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் றியர் அட்மிரல் ராஜன் கதிர்காமர். அவர் 9 ஆண்டுகள் 7 மாதங்கள் 15 நாட்கள் கடற்படைத் தளபதியாக இருந்து விட்டு 1970ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி ஓய்வு பெற்றிருந்தார்.

அதுபோலவே இலங்கைக் கடற்படையில் மிகக் குறுகியகாலம் தளபதியாக இருந்தவர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்றிருக்கிறார் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா. இவர் வெறும் 65 நாட்கள் மாத்திரமே பதவியில் இருந்துள்ளார்.

கடற்படையில் மாத்திரமன்றி முப்படைகளிலும் இவர்தான் மிகக் குறைந்த காலம் தளபதியாக இருந்தவர்.

இவரைக் கடற்படைத் தளபதியாக நியமிப்பதற்கு அரசாங்கத்துக்குள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் இருந்தன. அதையும் தாண்டி கடற்படைத் தளபதியாக அட்மிரல் சின்னையாவை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுவதற்கு ஆதரவாக கிளம்பிய குரல்களையும் கவனத்தில் கொள்ளவில்லை.

அட்மிரல் சின்னையா போர் அனுபவங்களைக் கொண்ட ஒருவர். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கடற்படையில் இருந்து விலகி அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய போதும் இலங்கைக் கடற்படைக்கான பயிற்சிகள், உதவிகளைப் பெற்றுக்கொடுத்தவர்.

கடற்படையை நவீனப்படுத்துவதில் புதிய உத்திகளைக் கையாளக் கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் 65 நாட்களுக்குள் அவரது கடற்படைத் தளபதி பதவி பறிபோயிருக்கிறது.

இவருக்கு முன்னர் கடற்படைத்தளபதியாக பதவியில் இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கூட ஒன்றுக்கு மூன்று தடவைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சேவை நீடிப்பு அளிக்கப்பட்டது. இப்போதும் அவர் கூட்டுப் படைகளின் தளபதியாக இருக்கிறார்.

ஆனால் அட்மிரல் சின்னையா ஒரு மாத சேவை நீடிப்புடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் தமிழர் ஒருவரை கடற்படத் தளபதியாக நியமித்திருப்பதாக பிரசாரங்கள் உசுப்பி விடப்பட்ட சல சலப்பு அடங்குவதற்குள்ளாகவே அவர் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அட்மிரல் சின்னையாவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாதது ஏன்? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் அவர் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்? என்று ஊடகங்களில் பல்வேறு கதைகளும் உலாவிக் கொண்டிருக்கின்றன.

கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றவுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் போரைப் பயன்படுத்தி, சீருடையில் குற்றமிழைத்த கடற்படை அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளை இவர் வெளிப்படையாக ஆதரித்திருந்தார்.

ரஷ்யாவிடம் இருந்து 158.5 மில்லியன் டொலர் செலவில் ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) என்ற போர்க்கப்பலைக் கொள்வனவு செய்யும் விவகாரத்தில் முரண்பட்ட கருத்தை அட்மிரல் சின்னையா கொண்டிருந்தார் என்ற தகவலும் உள்ளது.

கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடத்தப்பட்ட 11 மாணவர்கள் திருகோணமலை கடற்படைத் தளபத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில், அட்மிரல் சின்னையா சாட்சியம் அளித்திருந்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக இவரது சாட்சியம் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த வழக்கில் கடற்படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்கவில்லை என்று, அட்மிரல் சின்னையா பதவியில் இருந்த போது கூட குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அட்மிரல் சின்னையா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவதை முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய கூட்டுப் படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர குணவர்த்தன, விரும்பவில்லை என்றும், இந்தப் பதவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டமைக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் கூட கூறப்படுகிறது.

இப்படியாக அட்மிரல் சின்னையா ஓய்வு பெற வைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.எவ்வாறாயினும் அட்மிரல் சின்னையா கடற்படைத் தளபதியாக பதவியில் இருந்த காலத்தில் உள்ளக சவால்களைக் கடந்து கடற்படையின் பாதுகாப்பு தந்திரோபாயத்தில் மாற்றங்களைச் செய்திருந்தார்.

Leave a comment