மோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.!

223 0

சீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என காலநிலை அவதானி நிலையம் கூறியுள்ளது.

நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மழைக்காலநிலை நிலவும் நிலையில் அனர்த்தங்களும் பாதிப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய நிலைமையுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மலையகத்தில் நுவரெலியா, கண்டி மாத்தளை பகுதிகளிலும் இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மலைபிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு நகருமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

மேலும் மாவனெல்ல பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதை அடுத்து மாவனல்லை – வேகந்தலா பிரதேசத்தில் இருந்து 17 குடும்பங்களை அகற்றி வேறு இடங்களில் தங்கவைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை பகுதியிலும் சில பகுதிகளின் மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் உப வீதிகள் சில மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் கனமழை பெய்து வருகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்து வருகின்றது. சில பகுதிளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கலாம் எனவும் காலநிலை அவதான மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

Leave a comment