விசாரணையைத் தவிர்க்கவே மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – சிறைச்சாலை கண்காணிப்பாளர்

210 0

தம்மீதான விசாரணையைத் தவிர்க்கவே மூன்று அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் குறித்த மூன்று கைதிகளும் வழக்கு விசாரணைக்கு முதல் நாள் உண்பதில்லையெனவும், விசாரணை முடிவடைந்து மறுநாளிலிருந்து உணவை உண்டு வருவதாகவும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்டமா அதிபர் தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டவாளர் குசுன் சரத் சந்திர மற்றும் மாதவ தென்னக்கோன் ஆகியோர் அனுராதபுர நீதிமன்றில் இருந்து வவுனியா நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரி வெளியாரின் தூண்டுதலின் பேரிலேயே, மூன்று சந்தேக நபர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், நியாயமான அடிப்படையிலேயே இந்த வழக்கு வவுனியாவிலிருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டதாகவும், இதற்கு சட்டமா அதிபர் காரணமில்லையெனவும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கே வழக்கு அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டதாகவும்தெரிவித்தனர்.

இந்த முடிவு எவருக்கும் அதிருப்தியாக இருந்தால், போராட்டங்களை நடத்துவதை விட்டு விட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட முடியும் என்றும் அரசசட்டவாளர் குறிப்பிட்டார்.

வழக்கை இடமாற்றம் செய்வதற்கு போராட்டங்கள் உதவமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு டிசெம்பர் 5ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

Leave a comment