முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்!-மங்கள சமரவீர

359 0

புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ள கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் நடைபெற்ற வியன்கம என்ற நிகழ்வில் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் இதனைக் கூறியுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் எனவும், தேசத்துரோகிகளுக்கு மரணம் என்ற லேபலை (Label) ஒட்ட வேண்டும் எனவும் அந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு அவசியம் என 2015 ஆம் ஆண்டு 63 இலட்சம் மக்கள் உறுதி வழங்கியுள்ள நிலையிலேயே இவ்வாறான மிகவும் பாரதூரமான கருத்தை அந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ தனது எதிர்கால அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் வியன்கம எனும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வௌ்ளை வேன் கலாசாரத்தின் ஸ்தாபகரான கோட்டாபய ராஜபக்ஸவின் கொடுமையின் கனவு இன்னும் நிறைவு பெறவில்லை என்பது இதன் மூலம் தௌிவாவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக சில தரப்பினர் கொண்டு செல்லும் யுத்த குற்றச்சாட்டுக்கு தர்க்க ரீதியிலான பின்புலத்தை முன்னாள் இராணுவ அதிகாரி இதன் மூலம் ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாத வகையில், பாராளுமன்றத்திற்கு குண்டுத்தாக்கல் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ள விடயத்தையும் அமைச்சர் மங்கள சமரவீர நினைவுபடுத்தியுள்ளார்.

அன்று பாராளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட வீரவன்சவின் மைத்துனரின் வழிகாட்டலின் படி 88 -89 ஆம் ஆண்டு யுகத்தை மீண்டும் இந்த சமூகத்தில் ஏற்படுத்த முயல்வதாக அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணத்தை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுப்பதாகவும் தீய சக்திகளை மீண்டும் தோற்கடிக்கத் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment